தொப்பூர் கணவாயில் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது டிரைவர்-கிளனர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர், கிளனர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-08-25 22:45 GMT
நல்லம்பள்ளி,

அரியானா மாநிலத்தில் இருந்து வெந்தயம் மற்றும் பற்பசை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கோவைக்கு புறப்பட்டது. இந்த லாரியை அரியானா மாநிலத்தை சேர்ந்த கலீம்(வயது25) என்பவர் ஓட்டி வந்தார். கிளனராக முகமது இசாத்(25) உடன் வந்தார். இந்த லாரி நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்குள்ள வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். மேலும் லாரியில் இருந்த வெந்தயம், பற்பசை ஆகியவை சாலையில் சிதறின. இதன்காரணமாக தர்மபுரி- சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த டிரைவர் மற்றும் கிளனரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் போலீசார் போக்கு வரத்தை வேறு வழியில் திருப்பி விட்டு சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்