ஆரணி அருகே, மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி 2 தொழிலாளிகள் பலி

ஆரணி அருகே வேன் மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 தொழிலாளிகள் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-25 22:00 GMT
ஆரணி, 

ஆரணி கொசப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 48), மணி (40). இருவரும் கட்டிட தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். நேற்று இருவரும், ஒரே மோட்டார்சைக்கிளில் தேவிகாபுரம் சாலையில் இருந்து ஆரணியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, அந்த வழியாக எதிரே சென்ற ஒரு வேன் திடீரென அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளுடன் இருவரும் கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். விபத்து நடந்ததும் அதே இடத்தில் வேனை விட்டு விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான புருஷோத்தமன் மற்றும் மணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு விசாரணைக்காக வேன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு போலீசார் எடுத்துச் சென்றனர்.

மேலும் இது தொடர்பாக ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்