ஏற்காட்டில் தொடர் மழை : மலைப்பாதையில் திடீரென்று தோன்றிய அருவிகள்

ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் திடீரென்று அருவிகள் தோன்றி உள்ளன.

Update: 2019-08-24 23:15 GMT
ஏற்காடு,

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த ஏரிகளில் தண்ணீர் நிரம்புவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 வாரங்களாக இரவு நேரங்களில் பலத்த மழையும், சாரல் மழையும் மாறி, மாறி பெய்து வருகிறது. மேலும் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் மேக மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

ஏற்காட்டில் உள்ள கிராமப்புறங்களிலும் மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஏற்காடு ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால், ஏரி நிரம்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக நேற்று சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென்று அருவிகள் தோன்றின. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், நின்று ரசித்து செல்கிறார்கள். பலர் தங்களது செல்போனில் படம் எடுத்து சென்றதை காணமுடிந்தது. மேலும் சிலர் அருவிகள் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

மலைப்பாதையில் ஆங்காங்கே திடீரென்று அருவிகள் தோன்றி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், தொடர்ந்து பலத்த மழை பெய்தால், இந்த அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதே போல வீராணம் அருகே டி.பெருமாபாளையம் கல்லாறுமடுவு என்ற இடத்தில் அருவி ஒன்று உள்ளது. இங்கு ஏற்காட்டில் பலத்த மழை பெய்தால் மட்டும் தண்ணீர் கொட்டும். தற்போது மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் விழத்தொடங்கி உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ் கிறார்கள். சேலம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 234 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதன் சராசரி அளவு 15.6 மி.மீ. ஆகும். இதில் அதிகபட்சமாக மேட்டூரில் 60.4 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-

ஏற்காடு-42, காடையாம்பட்டி-41, ஓமலூர்-30, சேலம்-15.2, சங்ககிரி-17, வாழப்பாடி-8, ஆணைமடுவு-7, பெத்தநாயக்கன்பாளையம்-5.4, கரிய கோவில்-3, தம்மம்பட்டி-2.4, ஆத்தூர்-1.6, எடப்பாடி-1.

மேலும் செய்திகள்