குமாரபாளையத்தில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

குமாரபாளையத்தில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

Update: 2019-08-24 23:00 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

முதலாவதாக குமாரபாளையம் வட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் தட்டாங்குட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அமுதம் விற்பனை நிலையத்திற்குட்பட்ட ரேஷன் கடையை பார்வையிட்ட கலெக்டர் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து சரிபார்த்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமுதம் விற்பனை நிலையத்திற்குட்பட்ட ரேஷன் கடை எண்-3 மற்றும் கடை எண்-5 ஆகியவற்றிலும் மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களின் துணையுடன் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் சரியான எடையளவுடன் வழங்கப்படுகிறதா? என்று பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது குமாரபாளையம் தாசில்தார் தங்கம், வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்