மாவட்டத்தில், நாளை 3¼ லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்படுகிறது-சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

சேலம் மாவட்டத்தில் 3¼ லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ‘ திரவம் நாளை வழங்கப்படுகிறது.

Update: 2019-08-24 22:30 GMT
சேலம்,

மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வைட்டமின் ‘ஏ‘ என்ற உயிர்ச்சத்து உடலுக்கு இன்றியமையாதது ஆகும். இந்த சத்து ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய பங்களிக்கிறது. இது மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல் திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்தாகும். பெரும்பாலான மஞ்சள் நிற கனிகளான மாம்பழம், பப்பாளி மற்றும் கேரட், தக்காளி, பச்சைக்கீரை வகைகள், பால், மீன் மற்றும் முட்டையில் அதிகமாக இச்சத்து காணப்படும்.

இந்த சத்து குறைபாட்டினால் வறண்ட விழித்திரை, விழி வெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும். இவற்றிற்கு தக்க சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும். இதனை கருத்தில்கொண்டு வைட்டமின் ‘ஏ‘ திரவம் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ‘ஏ‘ திரவம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட துறைகளை சேர்ந்த 3 ஆயிரத்து 118 பணியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள். முகாமை 459 அலுவலர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.

இந்த முகாமில் சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 174 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ‘ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ‘ திரவத்தை அளித்து, கண் பார்வை குறைபாடில்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்