செல்போனில் ரகசியமாக பெண் போலீஸ் ஆடை மாற்றுவதை படம் பிடித்த போலீஸ்காரர் கைது
பெண் போலீஸ் ஆடை மாற்றுவதை செல்போனில் ரகசியமாக படம்பிடித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
பெண் போலீஸ் ஆடை மாற்றுவதை செல்போனில் ரகசியமாக படம்பிடித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆடை மாற்றும் அறையில் செல்போன்
மும்பை பாந்திரா, ஹில்ரோடு பகுதியில் உள்ள அரசு வங்கியில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் ஒருவர் ஈடுபட்டு இருந்தார். அவருடன் ஆயுதப்படை போலீஸ்காரர் அங்கித் பரப்(வயது29) என்பவரும் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். சம்பவத்தன்று பெண் போலீஸ் வங்கியில் உள்ள உடை மாற்றும் அறையில் சீருடை மாற்றினார்.
அப்போது, அங்கு போலீஸ்காரர் அங்கித் பரப்பின் செல்போன் இருந்தது. முதலில் போலீஸ்காரர் தெரியாமல் வைத்திருப்பார் என பெண் போலீஸ் நினைத்தார். இந்தநிலையில் மறுநாளும் உடை மாற்றும் அறையில் போலீஸ்காரரின் செல்போன் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெண் போலீஸ் செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது, அந்த செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் பெண் போலீஸ் ஆடை மாற்றுவதை படம்பிடித்து கொண்டு இருந்தது.
போலீஸ்காரர் கைது
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், இதுபற்றி அங்கித் பரப்பிடம் கேட்டார். உடனே அவர் பெண் போலீசின் கையில் இருந்த செல்போனை பறித்து அதில் பதிவாகி இருந்த வீடியோவை அழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண் போலீஸ் பாந்திரா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீஸ் ஆடை மாற்றுவதை ரகசியமாக செல்போனை வைத்து படம்பிடித்த போலீஸ்காரர் அங்கித் பரப்பை கைது செய்தனர். மேலும் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.