வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டுக்கல்,
திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் அருள் குணசேவியர் (வயது 26). கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் அருள் குணசேவியருக்கு தொடர்பிருப்பதும், அவருடன் கூட்டாளிகளாக சிலர் செயல்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்கு மட்டும் கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவர் மீது பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூத் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் அருள் குணசேவியர் குறித்து எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் வேடப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அருள் குணசேவியரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.