விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

விவசாயிகளுக்கு காப் பீட்டு தொகை வழங்காவிட்டால் சிவசேனா மீண்டும் போராட்டம் நடத்தும் என உத்தவ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.

Update: 2019-08-23 23:00 GMT
மும்பை, 

விவசாயிகளுக்கு காப் பீட்டு தொகை வழங்காவிட்டால் சிவசேனா மீண்டும் போராட்டம் நடத்தும் என உத்தவ் தாக்கரே எச்சரித்து உள்ளார்.

முறையாக வழங்கப்படாத காப்பீடு

மராட்டிய விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படாததை கண்டித்து சிவசேனா ஏற்கனவே மும்பையில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் முன்பு போராட்டம் நடத்தியது.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

90 லட்சம் விவசாயிகள்

பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 சதவீதம் தவணை தொகையை விவசாயிகள் செலுத்தினால் பாக்கி உள்ள 98 சதவீதத்தை அரசு செலுத்தும்.

இதில் மராட்டியத்தை சேர்ந்த 90 லட்சம் விவசாயிகள் தகுதியற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சுமார் ரூ.2 ஆயிரம் கோடி யாருக்கும் வினியோகிக்கப்படாமல் காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ளது.

எனது கேள்வி என்னவென்றால் இந்த விவசாயிகள் தகுதி அற்றவர்கள் என யார் முடிவு செய்தது. இதற்கான அளவுகோள் என்ன?

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு கட்டாயம் கிடைக்கவேண்டும். இது நடக்கவில்லை எனில் அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கிய பணத்தை திரும்ப பெற்று தனது சொந்த நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

இந்த திட்டம் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இதன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும். விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பு வழங்கப்படுவது குறித்து சிவசேனா கேள்வி எழுப்பிய பின்னர் தான் சுமார் 10 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.960 கோடி காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வினியோகிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்காவிட்டால் சிவசேனா மீண்டும் போராட்டத்தில் இறங்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்