காவிரி நீர் கும்பகோணம் வந்தது - ஆரத்தி எடுத்து வழிபாடு
கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கும்பகோணம் வந்தடைந்தது. இதனை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம், புது ஆறு உள்ளிட்ட ஆறுகளில் டெல்டா பகுதி பாசனத்திற்காக கடந்த 17-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த நீர் கும்பகோணம் காவிரி ஆற்றிற்கு நேற்று மாலை 4 மணிக்கு வந்தடைந்தது. இதை பார்த்த கும்பகோணம் பகுதி பொதுமக்கள், காவிரியில் திரண்டு வந்து நீருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். சிறுவர்கள் காவிரியில் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரியில் நீர் வந்ததையடுத்து கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.
கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையினால் குளம், குட்டைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என பொதுமக்கள் கூறினர்.