மன்னார்குடி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து அண்ணன்-தம்பி படுகாயம் - நரிக்குறவர் கைது
மன்னார்குடி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்ததில் அண்ணன்-தம்பி படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக நரிக்குறவரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 41). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் நேற்று பகல் 11 மணி அளவில் தனது மொபட்டில் நாட்டு துப்பாக்கியை மாட்டி வைத்துக் கொண்டு பாமணி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் மாட்டி வைத்து இருந்த துப்பாக்கியின் பெல்ட் அறுந்து மொபட்டில் இருந்து துப்பாக்கி கீழே விழுந்தது.
அப்போது அந்த வழியாக எதிரில் மன்னார்குடியை அடுத்த தென்காரவயல் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகன்கள் பாலமுரளி(வயது 13), செல்வபாலாஜி(12) ஆகியோர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். கீழே விழுந்ததும் துப்பாக்கி திடீரென வெடித்தது.
அப்போது துப்பாக்கி குண்டு பட்டதில் அண்ணன்- தம்பி இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரது கால்களிலும் பல இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலமுரளி மன்னார்குடி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், அவரது தம்பி செல்வ பாலாஜி தென்காரவயலில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நரிக்குறவர் சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.