தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி. ஆய்வு

தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

Update: 2019-08-23 22:45 GMT
நாகப்பட்டினம், 

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்ததையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உள்பட போலீசார் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மற்றும் போலீசார் வேளாங்கண்ணி அருகே பரவை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான மற்றும் வெளிமாநில வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

பின்னர் டி.ஐ.ஜி. லோகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து கடற்கரையோர பகுதிகளில் சந்தேகப்படும்படியான மர்ம நபர்கள் யாரேனும் ஊடுருவுகிறார்களா? எனவும் கண்காணித்து வருகின்றனர்.

வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி 6 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கண்காணித்து தீவிர சோதனைக்கு பிறகே பேராலயத்துக்குள் பக்தர்களை அனுமதிக்கின்றனர். மேலும் மர்ம நபர்கள் யாரேனும் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கிறார்களா? எனவும் அனைத்து விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையோர கிராமங்களின் வழியே மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டு வருகின்றனர். மேலும் 200 போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனம் மூலம் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு மட்டும் இல்லாமல் 140 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்து வருகிறோம்.

நாகூரில் பிடிபட்ட ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். போலீசாரின் சோதனைக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். கடலோர பகுதியில் சந்தேகப்படும் படியாக யாரேனும் மர்ம நபர்கள் சுற்றித்திரிந்தால், மீனவர்களும், பொதுமக்களும் உடனடியாக போலீசாரின் 100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்