தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட மனுக்களை பெறும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட மனுக்கள் பெறும் முகாமை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-23 23:30 GMT
தர்மபுரி,

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. தர்மபுரி தாலுகா வெள்ளோலை, அரூர் தாலுகா தாசிரஅள்ளி ஆகிய கிராமங்களில் இந்த சிறப்பு முகாமை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய தீர்வு காண உத்தரவிட்டார்.

இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின்படி நகரங்களில் உள்ள வார்டுகள் மற்றும் கிராமங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெறுகிறார்கள். வருகிற 30-ந்தேதி வரை மனுக்களை பெற்ற பின்னர் அந்த மனுக்களை கணினியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவார காலத்திற்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கோரிக்கை மனுக்களுக்கான தீர்வு விரைவில் எட்டப்படும்.

இதைத்தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதம் அமைச்சர்கள் தலைமையில் வட்டஅளவில் நடத்தப்பட உள்ள விழாக்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதோடு மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் வினியோகம் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும். மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் தமிழக அரசின் முக்கிய சிறப்பு திட்டமாக இது திகழும்.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், தாசில்தார்கள் சுகுமார், செல்வகுமார், தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்