கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்-திரளான பக்தர்கள் தரிசனம்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-08-23 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணர் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் சாமி ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசாமி கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவிலில் கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் உற்சவரை தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த இரண்டு தேர்களும் ஒன்று கூடி முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலுக்கு வந்தடைந்தது.

இதே போல வீடுகளில் கிருஷ்ணர் படத்திற்கும், கிருஷ்ணர் சிலைகளுக்கும் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும், சீடை, முறுக்கு, அவல், பொறி, வெண்ணெய் போன்றவற்றை கிருஷ்ணருக்கு படைத்து வழிபட்டனர். குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை போல வேடமிட்டு மகிழ்ந்தனர்.

ஓசூர் கோகுல் நகர், ரங்கோ பண்டித அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சாமி கோவிலில் விசேஷ வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி நாட்டிய நிகழ்ச்சி, கும்மி பாட்டு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணரை போல் வேடமணிந்து கோவில் வளாகத்தை வலம் வந்தனர். ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், வாணியர் தெருவில் உள்ள வேணுகோபால சாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தேன்கனிக்கோட்டையில் அகில உலக பக்தி இயக்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ஆன்மிக சொற்பொழிவு, மங்களார்த்தி, ஸ்ரீமத்பாகவத சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதே போல மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்