திருச்சி ஜங்ஷனில், ஜனசதாப்தி ரெயில் புறப்பட்டதும் திடீரென நின்றதால் பரபரப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஜனசதாப்தி ரெயில் புறப்பட்டதும் திடீரென நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-23 21:45 GMT
திருச்சி,

கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு திருச்சி வழியாக செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு காலை 10.55 மணிக்கு வந்து காலை 11.05 மணிக்கு புறப்படும். இந்த நிலையில் நேற்று காலை கோவையில் இருந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது. பயணிகள் ஏறி, இறங்கி கொண்டிருந்தனர். பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து திருச்சி ஜங்ஷனில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் சோதனை நடத்தினர். சிறிது நேரத்திற்கு பின் ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயில் திடீரென நின்றது.

இதனால் ரெயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ரெயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக வாக்கி-டாக்கி மூலம் என்ஜின் டிரைவரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது என்ஜின் டிரைவர் ரெயில் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென சத்தம் வந்ததால் ரெயிலை நிறுத்தியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரே என்ஜின் பகுதி முழுவதும் பார்வையிட்டு சோதனையிட்டார். பின்னர் ரெயிலை இயக்குவதாக ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு வாக்கி- டாக்கியில் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு காலை 11.20 மணிக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்