காட்பாடி குடியிருப்பு பகுதியில், செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

காட்பாடியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-23 22:15 GMT
காட்பாடி, 

காட்பாடி கல்புதூர் விதானா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள காலிநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் கோர்ட்டு அனுமதி பெற்று போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தில் நேற்று காலை செல்போன் டவர் அமைக்கும் பணியில் செல்போன் நிறுவன அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இங்கு செல்போன் டவர் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள், செல்போன் நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து செல்போன் நிறுவன அதிகாரிகள் பணிகளை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் செல்போன் டவர் அமைந்தால் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு உள்பட ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே செல்போன் டவர் அமைக்க கூடாது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். இதனை நாங்கள் சட்டரீதியாக அணுகுவோம். அதுவரை இங்கு செல்போன் டவர் அமைக்க விட மாட்டோம்’ என்றனர்.

மேலும் செய்திகள்