திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த பாதுகாப்பு பக்தர்களிடம் தீவிர சோதனை

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2019-08-23 22:00 GMT
திருச்செந்தூர், 

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

கடல் வழியாக சந்தேகப்படும்படியாக ஏதேனும் படகு வருகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில், கோவில் கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, கோவில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதலாக 300 போலீசார் பாதுகாப்பு

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 6 இடங்களில் போலீசார் வாகன சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனது தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இரவு முழுவதும் விடிய விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முன்எச்சரிக்கையாக 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மது குடித்து வாகனம் ஓட்டியவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்செந்தூர் நகரம், கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடலோர பகுதியில் ரோந்து செல்லும் வகையில், நவீன வாகனம் கொண்டு வரப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்