2 நாட்கள் தடைக்கு பிறகு திருச்செந்தூர் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு கடந்த 2 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
திருச்செந்தூர்,
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு கடந்த 2 நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் நேற்று கடலில் உற்சாகமாக புனித நீராடினர்.
குளிக்க தடை
தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான கடலோர பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது ஆவணித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இத்திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். ஆனால், கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
பக்தர்கள் உற்சாகம்
நேற்று காலையில் போலீசார் கண்காணிப்புடன், பக்தர்கள் கடலில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆவணி திருவிழாவை முன்னிட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்கள் உற்சாகமாக கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அமலிநகர், புன்னக்காயல், கொம்புத்துறை, சிங்கித்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. எனினும் வீரபாண்டியன்பட்டினம், ஆலந்தலை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.