நெல்லையில் ஆவின் நெய் அல்வா, பால் சர்பத் அறிமுகம் விற்பனையை தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்

நெல்லையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஆவின் நெய் அல்வா, பால் சர்பத் ஆகியவற்றின் விற்பனையை தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-23 22:00 GMT
நெல்லை, 

நெல்லையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஆவின் நெய் அல்வா, பால் சர்பத் ஆகியவற்றின் விற்பனையை தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

ஆவின் நெய் அல்வா

நெல்லை- தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் பால், நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது பல்வேறு புதிய வகை பொருட்களையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. தயிர் பாக்கெட், சர்க்கரை நோயாளிகளுக்கான மைசூர்பாகு, பால்கோவா, மில்க் கேக், மில்க் சேக் உள்ளிட்ட 20 வகையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

தற்போது நெல்லைக்கு பெயர் பெற்ற அல்வா தயாரிக்க முடிவு செய்து ஆவின் நெய் அல்வா மற்றும் பால் சர்பத் ஆகியவை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா நெல்லையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கி ஆவின் நெய் அல்வா மற்றும் பால் சர்பத் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆவின் நிறுவனத்தின் சார்பில் நெய் அல்வா விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ நெய் அல்வா ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 31-ந்தேதி வரை 1 கிலோ அல்வா வாங்கினால் ½ கிலோ அல்வா இலவசமாகவும், ½ கிலோ அல்வா வாங்கினால் ¼ கிலோ அல்வா இலவசமாகவும் வழங்கப்படும். பால் சர்பத் 250 மில்லி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை ஆவின் பாலகம் அனைத்திலும் விற்பனை செய்யப்படும்.

50 ஆயிரம் லிட்டர்

வள்ளியூர் பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆவின் பார்லர் திறக்கப்பட்டு உள்ளது. ஆறுமுகநேரியில் ஒரு பார்லர் அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஆவின் பால் 50 ஆயிரம் லிட்டர் விற்பனையாகிறது. இதை 60 ஆயிரம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால், தனியார் பால் விலையை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஆவின் துணைத்தலைவர் கணபதி, இயக்குனர்கள் முத்துசெல்வி, ராமலட்சுமி, ஸ்ரீதேவிநட்டார், பொது மேலாளர் ரெங்கநாததுரை, விற்பனை மேலாளர்கள் சாந்தி, அனுஷா, மேலாளர் தங்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்