வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

திருநள்ளாறில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-23 22:45 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில் திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் மஸ்தான் பள்ளி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் போலீசாரை கண்டவுடன் திடீரென ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது திருநள்ளாறு சுப்புராயபுரத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த ஆசாமி நுழைந்தார். போலீசார் அந்த வீட்டுக்குள் புகுந்து அவரை மடக்கிப் பிடித்ததுடன் அங்கு சோதனை போட்டதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து திருநள்ளாறு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் அவர் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த சங்கர் (வயது 49) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த வாரத்துக்கு முன்பு காரைக்கால் மாவட்டம் நிரவி ஹைவே நகரில் வீட்டில் இருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. திருநள்ளாறு சாலையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை சிறப்பு அதிரடிப்படைப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது திருநள்ளாறு பகுதியில் ஒரு வீட்டில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் பகுதியில் தொடர்ந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்