முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய குமாரசாமி முன்வந்தார் தேவேகவுடா பேட்டி

காங்கிரசார் கொடுத்த தொல்லையை குமாரசாமி தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார் என்றும், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் தேவேகவுடா கூறினார்.

Update: 2019-08-23 22:30 GMT
பெங்களூரு, 

காங்கிரசார் கொடுத்த தொல்லையை குமாரசாமி தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதார் என்றும், முதல்-மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் தேவேகவுடா கூறினார்.

கண்ணீர்விட்டு அழுதார்

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ யார் காரணம் என்பது குறித்து தேவேகவுடா, சித்தராமையா ஆகியோர் இடையே மோதல் வெடித்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். சித்தராமையா நேற்று தேவேகவுடாவை கடுமையாக சாடி பேட்டியளித்தார். இந்த நிலையில் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் குமாரசாமிக்கு தொல்லை கொடுத்தனர். அவர் என்னிடம் வந்து, கண்ணீர்விட்டு அழுது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். அவரை சமாதானப்படுத்தி பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தினேன். காங்கிரசார் கொடுத்த வலியை தினமும் சகித்துக்கொண்டு உணவு சாப்பிட்டேன்.

சகித்துக்கொண்டேன்

ஒருவேளை நாங்கள் அரசை கவிழ்த்திருந்தால், தேவேகவுடா கூட்டணி அரசை வீழ்த்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு வந்திருக்கும். அதற்காக காங்கிரசார் கொடுத்த அனைத்துவிதமான வலியையும் சகித்துக்கொண்டேன். கூட்டணி அரசை கவிழ்த்தது காங்கிரசார் தான். அரசு கவிழ்ந்துவிட்டதால் அனைத்து தகவல்களையும் நாங்கள் தற்போது பகிரங்கப்படுத்துகிறோம்.

கூட்டணியில் இருந்து மாநில கட்சியான எங்கள் கட்சி வெளியேறி இருந்தால் அது நாடு முழுமைக்கும் ஒரு தவறான தகவலை அனுப்பியிருக்கும். அதனால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஆட்சியை நடத்தும்படி குமாரசாமிக்கு அறிவுரை வழங்கினேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்