பல்லடம் அருகே, மொபட் மீது லாரி மோதல் - தொழிலாளி பலி

பல்லடம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-22 22:45 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில் என்கிற வடிவேலு (வயது 37). கூலிவேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பகவதி (28). செந்திலின் உறவினர் ஒருவர் பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் குடியிருந்து வருகிறார். வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு செந்திலுக்கு அவருடைய உறவினர் அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து செந்தில் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் வெங்கிட்டாபுரம் சென்றார்.

பின்னர் நேற்று காலையில் உறவினரின் மொபட்டை எடுத்துக்கொண்டு செந்தில் பல்லடம் வந்தார். பின்னர் அங்கிருந்து வெங்கிட்டாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லடம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சென்றபோது எதிரே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில், அந்த லாரி, செந்தில் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் செந்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் இறந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்