ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், கிரேன் மூலம் பெட்டிக்கடைகளை தூக்கி சென்றனர்
ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரேன் மூலம் பெட்டிக்கடைகளை தூக்கி சென்றனர்.
புதுச்சேரி,
புதுவை நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கடந்த காலங்களில் சாலையோரங்களில் சிறுசிறு தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்தவர்கள் இப்போது இடத்தை ஆக்கிரமித்து பெரிய அளவில் பெட்டிக்கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.
இதுதொடர்பாக அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்த புகார்கள் மீது தற்போது கலெக்டராக பதவியேற்றுள்ள அருண் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என்று சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதை வழக்கம்போல் கடைக்காரர்கள் மதிக்கவில்லை. அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட் டது. தொடர்ந்து முதற்கட்ட நடவடிக்கையாக கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி எதிரே இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.
அதன்பின் நகரப்பகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று அதிகாரிகள் பட்டியல் போட்டு பணிகளில் ஈடுபட்டனர். அந்த நேரத்திலும் கடைக்காரர்கள் தாங்களா கவே முன்வந்து ஆக்கிரமிப்பினை அகற்றுவதுபோல் காட்டிக்கொண்டு ஒரு சில தடுப்புகளை அகற்றி அதிகாரிகளை ஏமாற்றி மீண்டும் ஒரு சில நாட்களில் ஆக்கிரமிப்புகளை உருவாக்கிக்கொண்டனர். இதனால் அதிகாரிகளின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளானது. இது அரசு மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீருவது என்ற முடிவு செய்து இப்போது அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் ஏழுமலை, இளநிலை பொறியாளர் தேவதாஸ், புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் இளங்கோ, தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி., கிரேன், லாரிகள், ஊழியர்கள் சகிதமாக வந்தனர். பிரச்சினை வந்தால் சமாளிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சோனாம்பாளையம் சந்திப்பில் தொடங்கிய இந்த பணி கொசக்கடை வீதி சந்திப்பு வரை நடந்தது. அப்போது வீடுகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளைக் கூட பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எறிந்தனர். அவர்கள் பெட்டிக்கடைகளை அகற்ற வந்தபோது அதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், பிரச்சினை செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தார். பின்னர் கடைக்காரர்கள் கடையில் இருந்த பொருட் களை எடுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து கிரேன்கள் மூலம் அந்த கடைகளை தூக்கி லாரியில் வைத்து பொதுப்பணித்துறையினர் எடுத்து சென்றனர். சில கடைகளை அவ்வாறு தூக்க இயலாத நிலையில் அவற்றை பெயர்த்து எறிந்தனர். இந்த ஆக்கிரமிப்பின்போது 40 கடைகள் அகற்றப்பட்டன.
இந்த பணி காரணமாக நேற்று ஆம்பூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் அங்கு பரபரப்பு நிலவியது.