ப.சிதம்பரத்தை போல அல்லாமல் ராஜ் தாக்கரே அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார் சிவசேனா கருத்து

ப.சிதம்பரத்தை போல அல்லாமல் அமலாக்கத்துறைக்கு ராஜ்தாக்கரே முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

Update: 2019-08-23 00:00 GMT
மும்பை, 

ப.சிதம்பரத்தை போல அல்லாமல் அமலாக்கத்துறைக்கு ராஜ்தாக்கரே முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.

ப.சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேக்கும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அதன்படி அவர் நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

இந்த நிலையில் ராஜ்தாக்கரேக்கு ஆதரவாக அவரின் ஒன்றுவிட்ட சகோதரரும், பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் கருத்து தெரிவித்து இருந்தார். இதேபோல அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தும், ராஜ் தாக்கரேக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ராஜ் தாக்கரே ஒத்துழைப்பு

ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதே வழக்கில் அவரது மகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரம் தனது கைதை சிறிதுநேரம் தள்ளிப்போட முயற்சி செய்தார். அமலாக்கத்துறை நடவடிக்கைகளை தொடர்ந்து அரசியல் பழிவாங்கும் முயற்சி என குறிப்பிடுவது அந்த துறையை சேர்ந்த விசாரணை அதிகாரிகளை சோர்வடைய செய்யும்.

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு எதிராக எந்த ஒரு வலுவான ஆதாரமும் இல்லை என்பதை உத்தவ் தாக்கரே தெளிவாக கூறியுள்ளார். இதன்மூலம் உத்தவ் தாக்கரே தனது சகோதரருக்கு ஆதரவளித்துள்ளார். அவரின் முழு குடும்பமும் அவருக்கு ஆதரவாக பின்னால் நிற்கும்.

ப.சிதம்பரத்தை போல் இல்லாமல் ராஜ் தாக்கரே அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்