பழங்குடியினர் பள்ளிகளுக்கு நாற்காலிகள் வாங்கியதில் ரூ.125 கோடி ஊழல் எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

பழங்குடியினர் பள்ளிகளுக்கு நாற்காலிகள் வாங்கியதில் ரூ.125 கோடி ஊழல் நடந்திருப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-08-22 22:30 GMT
மும்பை,

பழங்குடியினர் பள்ளிகளுக்கு நாற்காலிகள் வாங்கியதில் ரூ.125 கோடி ஊழல் நடந்திருப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் குற்றம்சாட்டி உள்ளார்.

ரூ.125 கோடி ஊழல்

மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.125 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அமராவதி, நாசிக், நாக்பூர், தானே மற்றும் புனே மண்டலத்தில் உள்ள 463 பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு நாற்காலி, மேஜைகள், பெஞ்சு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் இருவேறு நிறுவனங்களிடம் இருந்து வெவ்வேறு விலைகளில் வாங்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.325 கோடிக்கு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.

விசாரணை

நாசிக், தானேயில் உள்ள பள்ளிகளுக்கு வாங்கிய பொருட்கள் அமராவதி, நாக்பூரில் உள்ள பள்ளிகளுக்கு வாங்கிய பொருட்களை விட 1½ மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.125 கோடி ஊழல் நடந்து இருப்பது தெரிகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் இந்த குற்றச்சாட்டை பழங்குடியினர் வளர்ச்சி துறை மறுத்து உள்ளது.

மேலும் செய்திகள்