சிறை வார்டன் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சிறை வார்டன் கொலை வழக்கில் சிக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-22 22:15 GMT
சேலம்,

சேலம் சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ். இவர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக இருந்தார். இவருக்கும், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த டேவிட் (வயது 34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் விலை உயர்ந்த 2 கார்களை எரித்ததாகவும், வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த ஆண்டு சூரமங்கலம் போலீசாரால் மாதேஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் டேவிட் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து சிறை வார்டன் மாதேசை வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட், செல்வம், விக்ரம் உள்பட 9 பேரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பட்டப்பகலில் இந்த கொடூர கொலை நடந்ததால் இந்த வழக்கில் தொடர்புடைய டேவிட், செல்வம், விக்ரம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சூரமங்கலம் போலீசார், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து சிறை வார்டன் மாதேஸ் கொலையில் தொடர்புடைய டேவிட் ,செல்வம், விக்ரம் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து நேற்று கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்