ப.சிதம்பரம் கைது: “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” - திருமாவளவன் குற்றச்சாட்டு
“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை“ என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். அவர் உள்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அமித்ஷா கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதற்கு பழித்தீர்த்து கொள்வதற்காக அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் சி.பி.ஐ. புலனாய்வு துறையை ஏவி இந்த பழிவாங்கும் நடவடிக்கையை நடத்தி உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்ஜாமீன் பெறுவதற்கு அவசர வழக்காக எடுக்கக்கோரி சட்டப்பூர்வமாக ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வழக்கை விசாரிப்பதாக சொன்ன நீதிபதி மாலை 4 மணிக்கு மேல் காணாமல் போய் விட்டார். இதிலிருந்து உச்ச நீதிமன்றத்தையும் உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது என்பதை உணர முடிகிறது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து முன்ஜாமீன் மறுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் நிச்சயமாக ப.சிதம்பரம் தானே முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து இருப்பார்.
ஆனால், வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்வதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. ஆகவே அவர் அநாகரிகமான முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி.
சி.பி.ஐ. தலைமை அதிகாரி, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் கூட்டு சதி, உச்சநீதிமன்றத்தின் துணையோடு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இதை செய்து உள்ளனர். காங்கிரஸ் முன்னணி தலைவர்களுள் தொடர்ந்து மோடி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர்களில் ப.சிதம்பரமும் ஒருவர். அதற்காகவே திட்டமிட்டு இந்த நடவடிக்கையை பா.ஜனதா அரசு மேற்கொண்டு உள்ளது.
அணுசக்திக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராடி கொண்டிருக்கும் நிலையில் அந்த அமைப்புகளோடு சேர்ந்து கூடங்குளத்தில் 3-வது அணு உலை அமைப்பதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை கண்டித்து வருகிற 30-ந்தேதி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
மேலும் அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வை பல லட்சம் பேர் எழுதுகிறார்கள். ஆனால், சில நூறு ஆசிரியர்களே தேர்ச்சி பெறுவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர் தகுதி மற்றும் கல்வித்திறன் மேம்படுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.