ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது: 4 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது. முதல் நாளில் 4 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர்.

Update: 2019-08-22 22:45 GMT
ஈரோடு,

இந்திய ராணுவத்தில் சோல்ஜர், சோல்ஜர் டெக்னிக்கல், அம்யூனிசன், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக இளைஞர்கள் பலர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர்.

தமிழகத்தை சேர்ந்த ஈரோடு, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வில் பங்கேற்க கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு கடிதம் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் அழைப்பு கடிதம் பெற்ற இளைஞர்கள் நேற்று முன்தினம் மாலையிலேயே ஈரோட்டுக்கு வர தொடங்கினார்கள். அவர்கள் அனைவரும் ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்துக்கு எதிரில் உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதில் சுமார் 4 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு வைத்து ராணுவ அதிகாரிகள் முகாம் விதிமுறைகளை விளக்கி கூறினார்கள். மேலும், அனுமதி சீட்டு இல்லாமலும், உடலில் பச்சை குத்தி இருந்தவர்களையும் ராணுவ அதிகாரிகள் வெளியேற்றினர். நேற்று அதிகாலை 3 மணிஅளவில் ராணுவ கர்னல் ஆர்.ஜே.ரானே முன்னிலையில் முகாம் தொடங்கியது.

இதன் தொடக்கத்தில் ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. இதில் இளைஞர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து 1,600 மீட்டர் தூரம் ஓட வைத்தனர். அதில் குறிப்பிட்ட தூரத்தை, குறிப்பிட்ட நேரத்தில் ஓட முடியாமல் திணறிய இளைஞர்களை முகாமில் இருந்து ராணுவ அதிகாரிகள் வெளியேற்றினர். ஒரு சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிகபட்சமாக 5 நிமிடம் 45 வினாடிக்குள் 1,600 மீட்டர் தூரம் ஓடியவர்கள் அடுத்தகட்ட உடல் தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஓரிரு வினாடிகள் தாமதமாக ஓடி முடித்த இளைஞர்களும் விதிமுறைக்கு உள்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

நீளம் தாண்டுதல், உடல் நிலை தன்மை அறிதல்(ஜிக்ஜாக்), கம்பியில் தொங்கியபடி உடலை உயர்த்துதல் (புல்அப்ஸ்) உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் தேர்வானவர்களுக்கு உயரம், மார்பளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் முழுமையாக தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனையில் தேர்வானவர்களுக்கு கோவையில் வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ள எழுத்து தேர்வுக்கான நுழைவு சீட்டை ராணுவ அதிகாரிகள் வழங்கினார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. 

மேலும் செய்திகள்