சேந்தமங்கலம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சேந்தமங்கலம் அருகே, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாத வகையில் பாலம் கட்ட வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம்,
சேந்தமங்கலம் அருகே உள்ள பழையபாளையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் சுமார் ரூ.8 கோடி செலவில் மேம்பாலம் மற்றும் தார்சாலை அமைக்கும் பணி ஆகியவை கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது. பழையபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் பழையபாளையம் ஏரி அப் பகுதியில் உள்ளது.
அந்த ஏரியின் கடகால் பகுதியில் உயரத்தை குறைத்து பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஏரியின் உயரத்தை குறைத்ததால், ஏரியில் தண்ணீர் தேங்காமல் எளிதில் வெளியேறிவிடும். எனவே ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாத வகையில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
இதன்பேரில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் பழையபாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை அந்த பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று காலை 8 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த சேந்தமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து 10 மணியளவில் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் காணப்பட்டது.