குமரியில் 8 மையங்களில் காவலர் பணிக்கான தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

குமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 8 மையங்களில் 9 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

Update: 2019-08-22 22:00 GMT
நாகர்கோவில்,

2019-2020-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர்கள் (ஆண், பெண்), 2-ம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண்கள், பெண்கள், இரண்டாம் பாலினத்தவர்கள்) மற்றும் தீயணைப்பாளர்கள் (ஆண்கள்) பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு வருகிற 25-ந் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு 8 மையங்களில் நடக்கிறது.

அதாவது குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி, குமரி மெட்ரிகுலேசன் உயர் நிலைப்பள்ளி, சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, வின்ஸ் மகளிர் கல்லூரி, வின்ஸ் ஆண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வை 9,046 பேர் எழுத உள்ளனர். தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கும்.

அனுமதி சீட்டு கட்டாயம்

தேர்வுக்கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே விண்ணப்பதாரர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய முடியாது. தேர்வு கூட அனுமதி சீட்டினை கட்டாயம் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வருவது நல்லது.

செல்போன், கால்குலேட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் தேர்வு எழுதும் அறைக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்வுக்கு வரும்போது கறுப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனா கொண்டு வரவேண்டும். பென்சில் கொண்டு வர கூடாது. அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து அழைப்பு கடித நகல் எடுத்து தேர்வு மையத்துக்கு வரவேண்டும்.

புகைப்படம்

நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அல்லது தெளிவாக தெரியாமல் இருந்தாலோ அதில் தங்களது புகைப்படத்தை ஒட்டி ஏ அல்லது பி பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் வாங்கி வருதல் அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்