நடத்தையில் சந்தேகப்பட்டு காதலியை அடித்து கொன்ற வாலிபர் கைது
நடத்தையில் சந்தேகப்பட்டு காதலியை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
நடத்தையில் சந்தேகப்பட்டு காதலியை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலனுடன் ஒரே வீட்டில்...
மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர் மரினா. அழகுகலை நிபுணர். இவர் மும்பையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது காதலன் ராம்சன்(20). இருவரும் சாந்தாகுருஸ், கலினா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர்.
கடந்த திங்கட்கிழமை ராம்சன், மரினாவை உடலில் காயங்களுடன் சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் மரினா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
கொலை அம்பலம்
இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் மரினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரினா வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக போலீசாரிடம் ராம்சன் கூறினார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராம்சனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் மரினாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.