நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை, கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-21 23:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேட்டை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கோழிபாண்டியனும், மணலூர் லால்புரத்தை சேர்ந்த மாயவன் மகன் மணிகண்டன்(24) என்பவரும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், கோழிபாண்டியன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில், தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். கோழிபாண்டியன் இறந்ததை உறுதி செய்ததும், அந்த வாலிபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கோழிபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி கோழிபாண்டியனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற வாலிபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கொலை நடந்த இடத்தில் நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு நாட்டு வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்தது. மேலும் கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளும் அங்கு கிடந்தது. இதையடுத்து போலீசார் அந்த நாட்டு வெடிகுண்டையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் புவனகிரி அம்பேத்கர், புதுச்சத்திரம் அமுதா, சிதம்பரம் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கோழிபாண்டியன் அண்ணாமலை நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், அப்போது கொலை செய்யப்பட்டவரின் கூட்டாளிகள் யாரேனும் பழிக்குபழி வாங்க அவரை கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்ததும் கோழி பாண்டியனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்