‘கல்வியில் தமிழகம் புதிய வரலாறு படைத்து இருக்கிறது’ அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

கல்வியில் தமிழகம் புதிய வரலாறு படைத்து இருக்கிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-08-21 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் பொன் விழா நேற்று நடந்தது. விழாவில் வி.ஈ.டி. இருபாலர் கலை அறிவியல் கல்லூரி கட்டிடத் திற்கான அடிக்கல்லை முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரிமோட் மூலம் திறந்து வைத்தார். பின்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:-

அரசர் காலத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு புதிய சரித்திரம் படைத்து இருக்கிறார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய அவர் அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்து உள்ளார். இதேபோல் பெண்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கல்விக்காக ரூ.34 ஆயிரத்து 700 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. கல்வியில் தமிழகம் புதிய வரலாறு படைத்து இருக்கிறது.

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்துக்கு முதலீடாக பெற்று தந்து உள்ளார். இதன் மூலமாக 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருடைய வழியில் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி திறமையே காரணம். உலக அளவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்று உள்ளது. அதற்கு அடித்தளமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது 65 புதிய கல்லூரிகளையும், 961 புதிய பாடப்பிரிவுகளையும் தொடங்கி வைத்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் 17 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஜெயலலிதா தொடங்கிய 961 பாடப்பிரிவுகளும் சேர்த்து மொத்தம் 1,666 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட்டன.

இந்திய அளவில் உயர் கல்வி பெறுபவர்களின் விவரம் 25.8 சதவீதமாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. உலக அளவில் உயர் கல்வி பெறுபவர்கள் சராசரியாக 36 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு கடந்த 2017-2018 ஆம் ஆண்டிலேயே உயர்கல்வியில் 48.6 சதவீதத்தை பெற்று உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் மாயமாகி இருந்த குளம், குட்டைகள் மீண்டும் மீட்கப்பட்டு உள்ளன. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் மூலமாக நிரம்பிய குளத்தில் தற்போதும் 50 சதவீதம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பெருமை முதல்-அமைச்சரையே சாரும். இதேபோல் பெண்களுக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், திருமண உதவித்தொகையாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் என ஏராளமான சிறந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்