வேலூரில் அரசு பஸ் மீது மோதி சாலையின் குறுக்கே நின்ற கன்டெய்னர் லாரி; தாய்-மகன் உள்பட 3 பேர் காயம்
வேலூர் வள்ளலார் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த அரசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதி கட்டுபாட்டை இழந்து மறுபுறம் சென்று சாலையின் குறுக்கே நின்றது. இதில், தாய்-மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
வேலூர்,
பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் (வயது 32) ஓட்டி வந்தார். நேற்று காலை 8 மணியளவில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை சத்துவாச்சாரி வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே லாரி வந்தது.
அந்த சமயம் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காஞ்சீபுரத்துக்கு சென்ற அரசு பஸ் வள்ளலார் பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. நெடுஞ்சாலையோரம் அரசு பஸ் நின்று கொண்டிருப்பதை லாரி டிரைவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பஸ்சின் அருகே வந்ததும் திடீரென சுதாரித்த டிரைவர் அதன் மீது மோதாமல் இருக்க லாரியை வேகமாக வலதுபுறம் திருப்பினார். ஆனாலும் பஸ்சின் பின் பகுதியில் லாரி மோதியது. அதன்பின்னரும் நிற்காத கன்டெய்னர் லாரி, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புகம்பிகளை உடைத்துக்கொண்டுசென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே நின்றது. இதையடுத்து டிரைவர் பெருமாளும், கிளனரும் லாரியிலிருந்து இறங்கி சென்று விட்டனர். லாரி மோதியதில் பஸ்சின் பின்பகுதி சிறிதளவு சேதமடைந்தது. பின்பக்க கண்ணாடியும் உடைந்தது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் வேலூர் ஓச்சேரியை சேர்ந்த விஜயன் (வயது 55) மற்றும் வள்ளலார் பஸ் நிறுத்தம் நோக்கி வந்த அதே பகுதியை சேர்ந்த சலீம் மனைவி நசீரா (32), மகன் அனித் (13) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து காரணமாக சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பெங்களூரு நோக்கி வந்த வாகனங்கள் அணுகுசாலை வழியாக சென்னைக்கு செல்ல திருப்பி விடப்பட்டன.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையின் குறுக்கே நின்ற லாரி அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.