வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும் - கிராம மக்கள், கலெக்டரிடம் மனு

வீட்டுமனை பட்டாவை அளந்து வீடுகள் கட்டி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2019-08-20 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி டி.மல்லசந்திரம் கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், கலெக்டர் பிரபாகரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் டி.மல்லசந்திரம் கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆதிதிராவிட இன மக்களாகிய நாங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் 50 குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறோம். அனைத்து குடும்பத்தினரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் 50 குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டிக் கொள்ள வீட்டுமனை பட்டா கடந்த 1996-ம் ஆண்டு வழங்கப்பட்டது. எங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியதே தவிர அளந்து தரவில்லை. அந்த நிலம் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து அரசு பெற்ற நிலமாகும். இந்த நிலையில் அந்த நபர் அந்த இடத்தை அவர் வசம் வைத்துக் கொண்டு எங்களுக்கு தர மறுக்கிறார். கடந்த 1996-ம் ஆண்டு அவர் நிலத்திற்கு பணம் பெற்ற போதிலும் எங்களுக்கு அவர் நிலத்தை தரவில்லை.

இது தொடர்பாக நாங்கள் தேன்கனிக்கோட்டை தாசில்தார், சார் பதிவாளர் என பலருக்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை.

ஆகவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைப்பட்டாவை அளந்து கொடுத்து வீடுகள் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்