பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
வெட்டிக்கொலை
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் குறவர் காலனியை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி சுப்பம்மாள் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரையும், 2 குழந்தைகளையும் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். அப்போது அவருக்கு பெருங்குளம் ஆலடியூரை சேர்ந்த ஜெயக்குமார் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயக்குமார், சுப்பம்மாளின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார். இதனால் சுப்பம்மாள் மற்றும் அவருடைய உறவினர்கள் ஜெயக்குமாரை சுப்பம்மாள் வீட்டுக்கு வரக்கூடாது என்று சத்தம் போட்டனர். இதனால் ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்தார். அவர் கடந்த 29-4-14 அன்று அந்த பகுதியில் உள்ள சிவன்குளக்கரையில் சென்று கொண்டு இருந்த சுப்பம்மாளை, தனது நண்பர் கணேசன் (42) என்பவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், கணேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன், குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார், கணேசன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜர் ஆனார்.