ரசாயனப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறதா? விநாயகர் சிலைகள் விற்கப்படும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஊத்துக்கோட்டையில் ரசாயனப்பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடைகளில் விற்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-20 22:45 GMT
ஊத்துக்கோட்டை,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 2-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வீடுகள், சாலை ஓரங்களில் சிறிய மற்றும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது உண்டு. பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட ரசாயனப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது, அவை கரையாமல் அப்படியே இருந்து விடுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனும் ரசாயனப்பொருள் கலந்து தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் உள்ள விநாயகர் சிலைகள் தயாரித்து விற்கப்படும் கடைகளில் ரசாயனப்பொருட்கள் அடங்கிய சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்று தாசில்தார் செல்வகுமார், துணை தாசில்தார் பாரதி, வருவாய் ஆய்வாளர் யுகந்தர், இன்ஸ்பெக்டர் அனுமந்தன் ஆகியோர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சிலைகளை சோதனை செய்து பார்த்தபோது பெரும்பாலான சிலைகள் களிமண் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.

மேலும் யாரேனும் தடை செய்யப்பட்ட ரசாயனப்பொருட்கள் அடங்கிய சிலைகளை தயார் செய்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

மேலும் செய்திகள்