நெருப்பூரில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

நெருப்பூரில் கடன் தொல்லையால் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-08-19 22:15 GMT
ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள நெருப்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 50). இவர் நெருப்பூரில் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி சேலத்தில் வசித்து வருகின்றனர். கணவர் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால் பாப்பாத்தி தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்ற பாப்பாத்தி நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் எந்த சத்தமும் இல்லாததால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாப்பாத்தி தூக்கில் பிணமாக தொங்குவதும், கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்