ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி - அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் சுந்தரபாண்டியன், துணை பொதுச்செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ரகோத்தமன் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வரவிற்கும் செலவுக்கும் உள்ள வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும், 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் தெய்வீகன், தங்கபாண்டியன், குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.