மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விவசாயக்கடன் தள்ளுபடி, புதிய வீடு, வாடகை உள்ளிட்ட சலுகைகள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயக்கடன் தள்ளுபடி, புதிய வீடு, வாடகை உள்ளிட்ட சலுகைகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.
மும்பை,
மேற்கு மராட்டியம், கொங்கன் மண்டலத்தில் உள்ள பல பகுதிகளில் சமீபத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். குறிப்பாக சாங்கிலி, சத்தாரா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெள்ள நிவாரண திட்டங்களை அறிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பருவமழை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படும்.
மழை வெள்ளம் காரணமாக ஒரு ஹெக்டேர் வரை விளை பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். மழையினால் வீடுகளை இழந்தவர் வாடகை வீட்டில் குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராமப்புறங்களில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரமும், நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 36 ஆயிரமும் வாடகையாக வழங்கப்படும். அவர்களின் வீடுகள் புனரமைக்கப்படும் வரை இந்த வாடகை வழங்கப் படும்.
பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டதின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் உதவியாக கிடைக்கும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்குவோம்.
சிறுவணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மொத்த இழப்பில் 75 சதவீதம் அல்லது ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை யாரும் தவறாக பயன் படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். அப்படி செய்தது தெரியவந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதில் தளர்வு வழங்க மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “மத்திய அரசிடம் வெள்ள நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் கோடி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை மத்திய உள் துறை மந்திரி அமித்ஷாவுக்கு கிடைத்ததும், ஆய்வு குழு மராட்டியம் வந்து பார்வையிடும். இதையடுத்து மத்திய அரசு நிதி உதவி அளிக்கும்” என்றார்.