கண்மாய், குளங்கள் எந்த தொழில் நுட்பத்தில் தூர்வாரப்படுகின்றன? பொதுப்பணித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கண்மாய், குளங்கள் எந்த தொழில்நுட்பத்தில் தூர்வாரப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு, இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலாளர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.

Update: 2019-08-19 22:30 GMT
மதுரை,

நெல்லையை சேர்ந்த சுந்தரவேல், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை பிராஞ்சேரி குளம், சுப்ரமணியபுரம் கேத குளம் ஆகியவற்றில் தூர்வாரும் பணி நடக்கிறது. அரசு விதிகளின்படி கண்மாய், குளங்களை தூர்வாரியபின், அதை சமம் செய்து தண்ணீரை சேமிக்க வழி செய்ய வேண்டும். கண்மாய், குளங்களில் எடுக்கப்படும் மண்ணை கண்மாய் மற்றும் குளக்கரையில் வைத்து அதன் உயரத்தை உயர்த்த வேண்டும். தூர்வாரும் பணி முடிந்த பின் கண்மாய், குளங்களின் கரையின் தரத்தை சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் விதி.

ஆனால் தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணிகளில் எங்கும் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை. சில கண்மாய்களில் கழிவு நீர் கலந்து தொற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளது.

விவசாயத்திற்கு உபயோகம் செய்யும் தண்ணீரில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோல தமிழகத்தில் பல கண்மாய்கள், குளங்களில் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடப்பதில்லை. நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்க நபார்டு வங்கி தமிழகத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது.

இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் தூர்வாரும் பணியில் அரசு விதிகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் நீர்நிலைகள் எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்பது குறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்