பஸ்சை சிறை பிடித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குடிநீர் வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-19 22:30 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள 2 மின்மோட்டார்களும் பழுதானதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி மற்றும் மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 3 மாதத்திற்கும் மேலாக ஆழ்துளை கிணற்றில் பொருத்திய மின்மோட்டார் பழுதடைந்து விட்டது. ஒகேனக்கல் குடிநீரும் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்