மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டியது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.
மேட்டூர்,
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலங்களில் மீண்டும் மழை பெய்வதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு மேல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் நேற்று 12-வது நாளாக தடை நீடித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கக்கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் அளந்து கண்காணித்து வருகிறார்கள்.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 114 அடியாக இருந்தது. மேலும் அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டி, 115.30 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்படும், தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.