கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை, மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளைகள் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுகிறது. இதன் காரணமாக நகர் பகுதியில் அவ்வப்போது மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைப்பாதையில் குருசடி என்ற இடத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.
இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை, தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது. இதையடுத்து மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த போதிலும் பழைய அணை, புதிய அணை ஆகியவை தற்போது வரை நிரம்பவில்லை. 21 அடி உயரம் கொண்ட பழைய அணையில் தற்போது 6.4 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.
அதேபோல் 36 அடி உயரம் கொண்ட புதிய அணையின் நீர்மட்டம் 7.9 அடியாக உள்ளது. இதனால் நகர் பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.