ஆவின் பால் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

ஆவின் பால் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-08-18 22:45 GMT
நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக, அரசாங்கத்தில் பங்கேற்கும் கட்சியாக பா.ஜனதா கண்டிப்பாக இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும். மேலும் கடலூரிலும், கடலிலும் கூட தாமரை மலர்ந்தே தீரும். தமிழகத்தில் அரசியல் என்பது நேர்மறையாக இருக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவது, குறை சொல்வது இருக்கக் கூடாது. இதனை தவிர்த்து விட்டு மக்களுக்கான திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் சிறந்தவர்களாக பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சவால் விட்டுள்ளார். முதல்-அமைச்சர் பாதுகாப்பு அதிகாரி இல்லாமல் கிராமத்துக்கு செல்ல முடியுமா? என கேட்டுள்ளார். இது என்ன சவால் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் கூட ஒரு சவால் விடுகிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரு மணி நேரம் பேச முடியுமா? இந்த சவாலை மு.க.ஸ்டாலினிடம் கேட்க முடியும். இதுபோன்ற சவால் தேவையற்றது.

இன்றைய தினம் ஆவின் பால் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதே மு.க.ஸ்டாலின், பால் முகவர்களுக்கு ஊதியம் அதிகரிக்க வேண்டும் என்றார். இதன் மூலம் தி.மு.க. இரட்டை வேடம் போடுவது மக்களுக்கு தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பாரா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அவரவர்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கிறார்கள் என்பதை விரைவில் பார்க்கலாம். மேலும் ரஜினிகாந்த், காஷ்மீர் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவித்தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

அப்போது மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாமரை மணிகண்டன், மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத், மாநில இளைஞரணி செயலாளர் அரசு ரங்கேஷ், புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன், பொன்னி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்