முக்கூடல் அருகே பரிதாபம்: தெருவில் கிடந்த தின்பண்டத்தை எடுத்து சாப்பிட்ட குழந்தை சாவு, மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை

முக்கூடல் அருகே தெருவில் கிடந்த தின்பண்டத்தை எடுத்து சாப்பிட்ட ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. மற்றொரு பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-08-18 21:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி ரெங்கசமுத்திரம், முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மகன் சுதன்ராஜ் (வயது 3). இந்த குழந்தையும், அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடைய 3 வயது மகள் முனேஷ் மற்றும் சிறுவர்கள் சம்பவத்தன்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது தெருவில் கிடந்த சாக்லேட் போன்ற ஏதோ தின்பண்டத்தை எடுத்து சுதன்ராஜ், முனேஷ் ஆகிய 2 குழந்தைகளும் சாப்பிட்டு உள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதன்ராஜ் நேற்று முன்தினம் இரவில் பரிதாபமாக இறந்தான். மற்றொரு குழந்தை முனேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தெருவில் கிடந்த தின்பண்டத்தை எடுத்து சாப்பிட்ட குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்