கோவில்பட்டியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கோவில்பட்டியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், சுகாதேவி, முத்துலட்சுமி, ஆவுடையப்பன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து மகாசபை சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர்ராஜா, மாவட்ட துணை தலைவர் நடராஜன் பாரதி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கோவில்பட்டி நகர் பகுதிகளில் 18 இடங்களில் சிலைகள் வைக்க இருப்பதாக தெரிவித்தனர்.
இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் பெரியசாமி, நகர பொதுச்செயலாளர் சுதாகர், நகர தலைவர் சீனிவாசன், கயத்தாறு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவில்பட்டி நகர் பகுதியில் 60 சிலைகளும், கயத்தாறு பகுதிகளில் 20 சிலைகளும் வைக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தனர். அதிக இடங்களில் சிலைகள் வைக்க முடிவு செய்யப்பட்டதால், நாளை (செவ்வாய்க்கிழமை) உதவி கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அதற் கான அனுமதியை பெற்றுகொள்ளுங்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் கூறினார்.
மேலும், விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு கீழ் இருக்க வேண்டும். கூரையால் பந்தல் அமைக்க கூடாது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி களிமண்ணால் ஆன சிலைகள் தான் வைக்கப்பட வேண்டும். சிலை வைப்பதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். அரசு உத்தரவுபடி சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர், மின்சார வாரியம், தீயணைப்பு துறை ஆகியோரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சிலைக்கு 24 மணி நேரமும் அந்தந்த அமைப்பாளர்கள் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொள்ள வேண்டும். யார் சிலை வைக்கிறார்களோ அவர்களே அதனை பாதுகாத்து கொள்ள வேண்டும். சிலை வைத்த 5-வது நாள் எடுத்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.