மாவட்டத்தில் 2-வது நாளாக விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை - அதிகபட்சமாக கடலூரில் 5½ செ.மீ. பதிவு
மாவட்டத்தில் 2-வது நாளாக விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக கடலூரில் 5½ சென்டி மீட்டர் பதிவானது.
கடலூர்,
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரு கிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கடந்த 16-ந் தேதி இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூரில் 13 சென்டி மீட்டர் மழை பதிவானது.
இந்த நிலையில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்த மழை நேரம் செல்ல செல்ல வேகம் பிடித்தது. இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதன் பின்னர் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் நிரம்பியதால் குளம்போல காட்சி அளித்தது.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம், பழைய கலெக்டர் அலுவலக சாலை போன்ற பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றதை காண முடிந்தது. மழையின் காரணமாக பாதசாரிகள் கையில் குடைபிடித்துக்கொண்டும், மழைகோட் அணிந்தும் சென்றதை பார்க்க முடிந்தது. சாலையோர சிறு வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஒருசிலர் கொட்டும் மழையில் குடை பிடித்துக்கொண்டே வியாபாரம் செய்தனர். பழவியாபாரம் சற்று மந்தமாக இருந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
இந்த மழை கடலூர் மட்டுமின்றி பரங்கிப்பேட்டை, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி என மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 5½ சென்டி மீட்டர் (55.80 மில்லி மீட்டர்) மழையும், குறைந்த பட்சமாக அண்ணாமலை நகரில் 0.80 மில்லி மீட்டரும் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 10.94 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பரங்கிப்பேட்டை ........... 39
எஸ்.ஆர்.சி.குடிதாங்கி.. 29.50
குப்பநத்தம் ................. 28.80
குறிஞ்சிப்பாடி .................. 17
விருத்தாசலம் ................... 15
கொத்தவாச்சேரி ............. 12
வானமாதேவி .................. 12
பண்ருட்டி ....................... 10
வடக்குத்து ........................ 7
பெலாந்துறை ............... 4.40
மே.மாத்தூர் .................... 3
புவனகிரி .......................... 1
சிதம்பரம் ...................... 0.90