கொடைக்கானலில் இருந்து பெரியகுளத்துக்கு, மலைப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
கொடைக்கானலில் இருந்து பெரியகுளத்துக்கு மலைப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகரில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாக காட்ரோடு என்ற இடத்துக்கு வந்து அங்கிருந்து தேவதானப்பட்டி வழியாக செல்ல வேண்டும். இதற்கு சுமார் 80 கி.மீ. தூரம் ஆகும். இதனை கருத்தில் கொண்டு கொடைக் கானல் நகரில் இருந்து பெருமாள்மலை, அடுக்கம், கும்பக்கரை அருவி வழியாக பெரியகுளத்துக்கு புதிய மலைப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
ஆனால் அது முழுமை பெறாத நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு மலைப்பாதை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக் கப்பட்டது. இதற்காக சுமார் ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால் இந்த மலைப்பாதையில் சுமார் 5 கி.மீ. தூரமுள்ள வனப்பகுதி வருகிறது. இந்த வனப்பகுதிக்குள் மலைப்பாதை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க மறுத்ததால் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி ‘கஜா’ புயல் காரணமாக ஏற்கனவே அமைக்கப்பட்ட மலைப்பாதை சேதம் அடைந்தது.
இதனிடையே வனப்பகுதியில் சுமார் 5 கி.மீ தூரமுள்ள மலைப்பாதையை வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி நெடுஞ்சாலைத்துறை மூலமே அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் வனப்பகுதியில் மலைப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் கொடைக்கானலில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் பெரியகுளம் நகரை அடையலாம். அத்துடன் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து தரைப்பகுதி செல்வதற்கு ஒரு மாற்று பாதையும் கிடைக்கும். எனவே மலைப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி உள்ளனர்.