ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை, பெண்கள் உள்பட 10 பேர் கைது - 8 மடிக்கணினிகள், 16 செல்போன்கள் பறிமுதல்
பழனியில், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மடிக்கணினி, 16 செல்போன்கள் மற்றும் ஒரு பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுவுக்கு புகார் வந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, பாஸ்டின் தினகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் பழனி சண்முகபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த வீட்டில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 42), பழனி அடிவாரம் 8-வது வார்டை சேர்ந்த வசந்தகுமார் (30) மற்றும் பழனி பகுதியை சேர்ந்த 8 பெண்கள் உள்பட 10 பேரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த வீட்டில், ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்திய 8 மடிக்கணினிகள், 16 செல்போன்கள், ஒரு பிரிண்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.