செல்போனில் ஆர்டர் எடுத்து, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

கோவையில் செல்போனில் ஆர்டர் எடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-18 22:30 GMT
கோவை,

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் பீளமேடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திடக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபருக்கு தேனியில் இருந்து வரும் ஒருவர் கஞ்சா சப்ளை செய்வது தெரியவந்தது. எனவே அந்த வாலிபர் மூலம் கஞ்சா சப்ளை செய்யும் ஆசாமியை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் அந்த ஆசாமி நேற்றுமுன்தினம் பீளமேடு வந்தார். அவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மு குண்டு என்ற கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி(வயது 33) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

கைது செய்யப்படட மலைச்சாமி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவர், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் செல்போனில் பேசி ஆர்டர் எடுத்துள்ளார். பின்னர் தேவையான அளவு கஞ்சாவை தேனிக்கு சென்று வாங்கி கோவைக்கு பஸ்சில் கொண்டு வருவார். பின்னர் கல்லூரி மாணவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லி கஞ்சா பொட்டலங்களை விற்று விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.ஒவ்வொரு முறை கோவைக்கு வரும் போதும் 3 கிலோ கஞ்சா கொண்டு வருவார். வாரத்துக்கு 2 முறை கோவை வந்து ரூ.24 ஆயிரம் வரை கஞ்சா விற்றுள்ளார். மலைச்சாமியின் செல்போனில் ஏராளமான கல்லூரி மாணவர்களின் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்